இந்துசமய விளக்கம்

இந்து சமயம்

இந்திய உபகண்டத்தின் மிகப் பழைமை வாய்ந்த சமயம் இந்து சமயமாகும். பரந்த கண்ணோட்டமும் பண்பாடும் கொண்டது. கி.மு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது இந்து சமயம் எனக் கூறலாம். மற்றைய சமயங்களைப் போல இந்து சமயத்தை ஆரம்பித்தவர், ஆதியில் போதித்தவர் என எவரையும் குறிப்பிட்டுக் கூற முடியாது.

இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் மற்றும் உலநாடுகள் வரை இந்துக்கள் இன்று பரந்து வாழ்கின்றனர். ஏறக்குறைய 100 கோடி மக்கள் இந்துசமயத்தைச் சார்ந்துள்ளனர்.

பக்திநெறியும் கட்டுப்பாடுகளும் சித்தாந்தமும் கொண்ட சமயம் இந்து சமயம். ஆத்மா அழிவற்றது; அரிதான மானிடப் பிறவியில் தெய்வ வழிபாட்டுடன் அறவாழ்வு வாழ்ந்து மறுபிறவித் தொடரிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலே இந்து சமயத்தவரின் குறிக்கோளாகும். இந்த உயர்ந்த நிலையை மோட்சம் என்பர்.

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுவர். ஆயினும் முழுமுதற் கடவுளாக சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் கொள்வர். பிரம்மாவைப் படைப்புத் தெய்வமாகவும் விஷ்ணுவை காக்கும் கடவுளாகும், சிவனை அழிக்கும் தெய்வமாகவும் இந்து சமயம் கூறும். சிவனை, சிவலிங்க வடிவத்திலும் வழிபடுபவர் சைவசமயத்தினர். நடன உருவத்தில் நடராசப் பெருமானாகவும் சிவபெருமான் சிதம்பரத்தில் காட்சி தருவார். சைவ சமயத்தவர் நெற்றியில் விபூதியை, சிறப்பாக மூன்று குறிகளுடன் அணிவர்.

விஷ்ணுவை வழிபடுவர் வைஷ்ணவர். விஷ்ணுவை இராமர் அவதாரமாக இராமாயணத்திலும், கிருஷ்ணர் அவதாரமாக மகாபாரதத்திலும் பார்க்கலாம். வைஷ்ணவர்கள் நாமம் போட்டுக் கொள்வர். பிரம்மாவுக்கென தனிச் சமயம் இல்லை.

மேலும் காளி, துர்க்கை, பார்வதி அம்மன், சரஸ்வதி, இலட்சுமி போன்ற பெண் தெய்வங்களையும் முருகன், விநாயகர், வைரவர் முதலான தெய்வங்களையும் சைவர்கள் வழிபடுவர். அண்ணன்மார், வீரபத்திரர் போன்ற வீரபுருஷரான சிறுதெய்வ வழிபாடுகளும் உள.

இந்துசமயம் இவ்வாறு பல்வேறு தெய்வங்களின் விக்கிரக வழிபாட்டையும் ஏற்கும். கோவில்களிலும் வீடுகளிலும் விக்கிரகம், படங்களை வைத்து இந்துக்கள் வழிபடுவர்.

தீபாவளி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியன இந்து சமயத்தவரின் சிறப்பான வழிபாட்டு விழா நாட்களாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், ஐப்பசி மாதத்து வெள்ளிக் கிழமைகள், கார்த்திகை திங்கள், கந்த சஷ்டி போன்ற காலங்களில் விரதமிருந்தும் (நோன்பு) வழிபடுவர்.

இந்து நதிக்கரையில் நிலவிய இயற்கை வழிபாடும் மத்திய ஆசியாவிலிருந்து கி.மு. 1500 வரை இந்தியாவிற்கு வந்த ஆரியரின் வேத, உபநிடமும் இணைந்து இந்து சமயம் உருப்பெற்றது என்றும் கூறுவர்.

இராமாயணம், மகாபாரம் உப்ட்ட இதிகாசங்களும் பல்வேறு புராணங்களம் இந்துசமயத்தின் ஆதாரமாக உள்ளன. பகவத் கீதை இந்துக்களின் புனித நூலாகக் கொள்ளப்படுகிறது. பாரதயுத்த களத்தில் எதிரியாக உறவினர்களைக் கண்டு கலங்கிய அர்ச்சுனனுக்கு கீதோபசாரமாக பகவான் கிருஷ்ணர் கூறும் அறிவுரைகளைக் கொண்டது பகவத்கீதை. ‘ஆத்மா அழிவற்றது, கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே’ எனப் போதிக்கும் நூல்.

இந்து சமயம் பிற சமயக் கொள்கைகளையும் அணைக்கக் கூடிய சமயம்; சமயக் கொள்கையை, கிறிஸ்தவம், இஸ்லாம் போலப் பரப்பவோ முயல்வதில்லை. கி.மு. 6ம் நூற்றாண்டு வரையில் சமணசமயம், புத்த சமயங்களுக்கும் இந்து சமயம் வழிவிட்டது.

காலப்போக்கில் புத்தசமயம் தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்து சமயம் புத்த, சமண சமயங்களின் சிறப்பம்சங்களை ஏற்றுக் கொண்டதனாலும் இச்சமயங்கள் வலுவிழந்து வந்தன. தமிழ்நாட்டில் கி.பி. 6இ7ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி காலகட்டத்தில் சைவ சமயம் வலுப்பெற்றது. நாயன்மார்கள் தோன்றி தேவார திருவாசகங்கள் பாடியதோடு சைவசமயத்தை விரிவுபடுத்தினர். வடஇந்தியவில் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில் இந்து சமய எழுச்சி ஏற்பட்டது என்பர்.

முகலாய சாம்ராச்சிய காலத்தில் இஸ்லாமும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவமும் அரசுகளின் செல்வாக்குகளுடன் இந்தியாவில் பரப்பப்பட்டன; ஆயினும் இன்று 100 கோடி மக்களது சமயமாக, உலகின் மூன்றாவது மிகப் பெரிய சமயமாக இந்து சமயம் நிலைபெற்றுள்ளது. ராம்மோகன்ராய், இராமகிஷ்ணர், மகாத்மாகாந்தி போன்ற சமயப் பேரறிஞர்கள் தொடர்ந்து இந்து சமயத்தைப் பேணிவந்தனர்.

பல தெய்வங்கள், வளம்மிக்க புராண, இதிகாச இலக்கியங்கள், விரிவான இந்து சமயத் சித்தாந்தம் ஆகியன இந்து சமயத்தைப் பாதுகாத்து வருவன என்பவர்.

ஆத்மா அழிவற்றது. கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே – கீதை