ஆலய வரலாறு

சமயப் புரட்சியில் செங்காளன் ஆலயம்

ஞா.குகநாதன்,
மூத்த ஊடகவியலாளர்,
முன்னாள் செய்தி ஆசிரியர், உதயன்

அழகும் வனப்பும் மிகுந்த சுவிற்சர்லாந்து நாட்டில் செங்காளன் மாநிலத்தில் சென்மார்க்கிறேத்தன் பதியில் எழுந்தருளி, புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு அருளாட்சி புரியும் கதிர்வேலாயுத சுவாமிகளின் அற்புதங்களை சுவிஸ்நாட்டில் வாழும் பிரஜைகளும் ஆவலுடன் அறியும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை எமது சமயத்துக்கு கிடைத்த பெரும்பாக்கியம் என்று தான் கூறவேண்டும்.

இந்த ஆலயத்தை மையப்படுத்தி இந்த நாட்டில் வாழும் சுவிஸ் மக்கள் தம்மை ஆலயத்துடன் இணைத்துக் கொண்டமை எமது சமயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

தாய்நாட்டில் சைவசமயத்துக்கு இக்கட்டுகள் ஏற்படும் போதெல்லாம் நாவலர் போன்ற பெருந்தகைகள் உருவாகி சமயப்புரட்சியை மேற்கொண்டனர். அதன மூலம் சமயத்தின் பழமையும் தொன்மையும் பாதுகாக்கப்பட்டு சமயம் உயர்வு பெற்றமை வரலாறாகும்.

இன்று சுவிஸ் நாட்டில் நடப்பவற்றை உற்றுநோக்கினால் அதுவும் ஒரு சமயப்புரட்சிதான். அதற்கு மூலகாரணமாகச் செயற்படுவது சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயந்தான் என்று துணிந்து கூறமுடியும்.

சுவிஸ் மொழியில் சமய தத்துவங்கள் 
சமய தத்துவங்களை, கிரியை முறைகளை சுவிஸ் நாட்டவர்கள் விளங்கும் மொழியில் மொழிபெயர்த்து அவர்களுக்கு இந்த ஆலயம் வழங்கி வருகிறது. அவற்றை படித்து எம்மதம்பால் ஆயிரக்கணக்கான சுவிஸ் நாட்டவர்கள் இழுக்கப்பட்டுள்ளனர்.
 பெயரையே மாற்றும் நிலை
சைவசமயம் கூறும் தத்துவங்களை அறிந்து கொண்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பலர், தமது பெயர்களையே மாற்றியுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் தனது பெயரை “சுப்பிரமணியம்” என மாற்றி ஆலயத் தொண்டில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளார். அவர் எங்கள் சமய முறைப்படி ஆடை அணிந்து ஆலயத் தொண்டில் ஈடுபடுவதைப் பார்க்கும் பொது வியப்பாக இருக்கிறது.

இவரைப் போன்று பலரும் ஆலயத் தொண்டுப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.

பலர் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குக் கூட முருகனின் பெயரை சூட்டி மகிழ்கிறார்கள்.

சைவ முறைப்படி திருமணம் புரியும் சுவிஸ் தம்பதிகள் 
சைவசமயத்தின் கிரியை முறைகளை அறிந்து அந்த முறைப்படி திருமணம் செய்ய பலர் முன்வந்துள்ளனர். இதுவரை பல திருமணங்கள் சைவமுறைப்படி ஆலயத்தில் நடைபெற்றுள்ளன.

சைவ முறைப்படி ஆணும், பெண்ணும் உடை அணிந்து, ஓமம் வளர்த்து தாலிகட்டி தம்பதியான சம்பவங்கள் சைவ சமயத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள பிடிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சுவிஸ் இளம் தலைமுறையினர் சமயம் மேல்நாட்டம் 
இதற்கு மேலாக மாதத்தில் இருதடவைகள் சுவிஸ் இளம்தலைமுறையினர் ஆலயத்துக்கு குழுக்களாக வருகை தந்து சமயத்தின் கோட்பாடுகளை அறிந்து செல்கிறார்கள்.

30 முதல்  60 பேர்   வரையில்  குழுக்களாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்,தொழில்நுட்பக்கல்வி நிலையங்கள், மற்றைய சமயத்தலங்களில் இருந்து மாணவர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் பூசைகளில் கலந்து கொள்வதுடன், சமயக் கோட்பாடுகள் தொடர்பான விரிவுரைகளிலும் பங்குபெறுகின்றனர். அப்போது தமது ஐயங்களை கேட்டு பதிலைப் பெற்று திருப்திப் படுகிறார்கள்.

அவர்களுக்கு ஆலய பூசைகள் தொடர்பான விளக்கங்களுடன் யோகப் பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

ஆலயத்தை மையமாக வைத்து சமயத்தின் தத்துவங்களை சுவிஸ் மக்களும் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள   கதிர் வேலாயுதசுவாமி ஆலயத்தின் சிறப்புகள் குறித்து ஆராய்வோம்.

 ஆகம விதிமுறைப்படி ஆலயம் அமைப்பு
சென்மார்க்கிறேத்தன்    பிரதேச மக்கள்   சைவ ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற அவாவின் காரணமாக    அந்தப் பிரதேச மக்கள் ஒன்றுபட்டு முருகன் ஆலயம் ஒன்றை ஸ்தாபிக்க      2005   ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.    ஆரம்பத்தில்    சிறிய     ஆலயமாக     அமைத்து    பூசை   நைமித்தியங்களைச்  செய்து   வந்த    மக்கள், சைவ ஆகம முறைப்படி   ஆலயத்தை      நிர்மாணித்தனர்.
ஆகம விதிமுறைப்படி வேல் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. பிள்ளையார், துர்க்கா, வைரவர், சண்முகப் பெருமான்    , நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை சுற்றுப் பிரகாரத்தில் அமைத்து ஆலயம் மெருகூட்டபட்டுள்ளது. உள்வீதி, வெளிவீதி, மடப்பள்ளி, களஞ்சியம் ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டு ஆலயம் மிளிர்கிறது. ஆலய உள்மண்டபத்தில் முருகனின் அற்புதங்களை எடுத்துக் கூறும் வகையில் வண்ணமயமான காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆலய உள் அமைப்பு சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி தோறும் விசேட பூசை

ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் மாலையில் விசேட பூசைகள் இடம் பெறுகின்றன. பெரும் எண்ணிக்கையானவர்கள் இப்பூசைகளில் பங்குபற்றி முருகனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்பார்கள்.

ஆலயப் பூசையுடன் இளம் சிறார்களின் பக்திமணம் கமழும் கூட்டுப் பிரார்த்தனையும் இடம் பெறுகிறது.

வெள்ளி தோறும் இடம் பெறும் பூசைகளுக்கு புறம்பாக மாதா மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகிறது.

விரத தினங்களிலும் விசேட உற்சவங்கள்

இவற்றுக்கெல்லாம் மேலாக தைப்பூசம், தைப் பொங்கல், மாசிமகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருடப்பிறப்பு, சித்திரை பூரணை, ஆனி உத்திரம், ஆடிமாதப் பிறப்பு, ஆடிமாத செவ்வாய் விரதம், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாதி சனி, நவராத்திரி, கேதார கௌரி விரதம், ஐப்பசி வெள்ளி, தீபாவளி, கந்தசஷ்டி, சர்வாலயதீபம், பிள்ளையார் கதை, திருவெம்பாவை ஆகிய விரத தினங்களில் விசேட உற்சவங்கள் நடைபெறுகின்றன. இந்த உற்சவங்களுக்கென குறித்தொதுக்கப்பட்ட உபயகாரர்கள் அந்த உற்சவங்களை சிறப்பாக நடத்துகின்றனர்.

வைகாசியில் வருடாந்த உற்சவம்
விசேடமாக ஆலய வருடாந்த உற்சவமும் கந்தசஷ்டி விரத உற்சவமும் சிறப்புற பக்தி பூர்வமாக இடம்பெறும்.
வைகாசி மாதத்தில்   வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக தொடர்ந்து பத்துத் தினங்கள் பக்திமயமாக இடம்பெறும்.
ஜோதிரூபக்காட்சித் திருவிழா, சங்காபிஷேகம், ஷட்கோணக்காட்சித் திருவிழா, குருந்தமரத்திருவிழா, கப்பல் திருவிழா, மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, திருக்கல்யாணத் திருவிழா என பத்துத் தினங்களும் திருவிழாக்கள் சிறப்புற நடைபெறும். திருவிழாக்காலங்களில் விசேட சமயச் சொற்பொழிவுகளும், விசேட கலைஞர்களின் மேளக் கச்சேரிகளும் இடம் பெறுகின்றன.
இந்த திருவிழாக்களில் உச்ச கட்டமாக இடம்பெறும் தேர்த்திருவிழாவி ல்    பக்தர்கள்   வேல்குத்தி காவடி எடுத்தும், பிரதட்டை செய்தும் தமது   நேர்த்திகளை பூர்த்தி செய்வர்.
அதிசயங்கள் சில
கடந்த வருட தேர்த்திருவிழாவின் போது அதிசயம் ஒன்று இடம் பெற்றது. அன்றைய தினம் காலை முதல் தொடர்ந்து கடும் மழை பெய்து கொண்டிருந்தது மழை காரணமாக எப்படி முருகன் தேரில் ஆரோகணிக்கப் போகிறார் என்ற கவலை பக்தர்களை வாட்டியது.
முருகன் தேரில் அமர்ந்து வலம் வர ஆரம்பிக்க, கருமேகங்கள் எல்லாம் மறைந்து திடீரென சூரிய பகவான் காட்சிதந்தார். முருகன் வெளிவீதி வலம் வந்து இருப்புக்கு திரும்பும் வரை சூரிய பகவானின் பார்வை ஆலயத்தை வட்டமிட்டது.
அந்த நேரம் அயல் கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் பகுதியில் மழை பெய்கிறது. இங்கு மழை பெய்யவில்லை எனக் கூறி முருகனின் அருளால் புளகாங்கிதம் அடைந்தனர். முருகனின் திருவருளைக்   கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

இதே போன்று        2010   ஆம் ஆண்டு ஆலயத்தில் இடம் பெற்ற கந்தசஷ்டி உற்சவத்தின் போதும் அதிசயம் ஒன்று இடம் பெற்றது.

 வெள்ளை மயிலின் வருகை
கந்த சஷ்டித் திருவிழாவின் 2 ஆம் நாள் வெள்ளை மயில் ஒன்று ஆலயப் பிரவாகத்துக்குள் திடீரெனப் புகுந்து கொண்டது. ஆலய நிர்வாகம், சுவிஸ் அரச நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு அந்த வெள்ளை மயிலை ஆலயத்துடன் இணைத்துக் கொண்டனர். இந்த வெள்ளை மயிலின் வருகை ஆலய பக்தர்களிடையே உற்சாகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயில்கள் வடிவில் ரிஷிகள், முனிவர்கள் வந்து முருகனை வழிபடுவதாக ஐதீகம் உண்டு. அந்த வகையில் சென்மார்க்கிறேத்தனில் எழுந்தருளி கதிர்வேலாயுத சுவாமியை வழிபட வெள்ளை மயில் வடிவில் ரிஷிகள், முனிவர்கள் வந்துள்ளனர் என்றே கருதவேண்டியுள்ளது.
வருடா வருடம் இடம்பெறும் கந்தசஷ்டி திருவிழாவில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆலயத்துக்கு வந்து விரதம் அனுஷ்டிப்பதை அவதானிக்க முடிகிறது. பக்தியுடன் முறைப்படி அவர்கள் இங்கு விரதம் அனுஷ்டித்து, இறுதி நாள் சூரன்போர் திருவிழாவிலும் பங்குபெறுகின்றனர்.
வேதாகமப்படி கிரியைகள்
ஆலயத்தில் பிரதம குருக்களான பிரம்ம ஸ்ரீ பா.ஜோதிநாதக் குருக்கள் தலைமையில் அந்தணர்குழு ஆலய உற்சவங்களை வேதசிவாகம முறைப்படி நடத்தி வருகிறார்கள். பக்திமணம் கமழ அவர்கள் பூசை வழிபாடுகளை நடத்துவது சிறப்பு அம்சமாகும்.
செம்மையான நிர்வாகம்
ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வே.கணேசகுமார் தலைமையிலான நிர்வாகம் ஆலயத்தை செம்மையாக நடத்திவருகின்றது. அவரின் வழிப்படுத்தலில் பொருளாளராக எஸ். அற்புதராசா(குணம்), செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் சிவம், சதிஸ்குமார், ஸ்ரீ ஆகியோரும் இருந்து ஆலயத்தை நல்ல முறையில் நடத்துகின்றனர்.
சமயப் பெரியோர் தரிசிப்பு
தமிழகம், இலங்கை, மலேசியா, மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து ஆதினங்கள், சுவாமிகள், சமயப் பெரியார்கள் ஆலயத்துக்கு வந்து சென்றுள்ளனர். அவர்களின் அரிய சொற்பொழிவுகளை அப்பிரதேச மக்கள் கேட்டு இன்புற்று இருக்கிறார்கள்.
இந்த வகையில் மலேசியா திருவாக்கு திருபீடத்தின் ஸ்தாபகர் பாலயோகி சுவாமிகள்,         நல்லை ஆதீன முதல்வர்     ஸ்ரீ லஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், கௌமார மடத்திலிருந்து குமரகுரு சுவாமிகள், கேரளாவிலிருந்து முரளிகிருஷ்ண சரவணபாபா சுவாமிகள், தலாய்லாமா அவர்களின் சீடர்கள், சர்வமத பீட அங்கத்தவர்கள், உலக சைவப் பேரவைத் தலைவர் யோகானந்த அடிகள் வாழும் கலைப்பயிற்சி ஸ்தாபகர், குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி தீர்த்த மகராஜ, கைலயங்கிரி சுவாமிநாதன், பேராசிரியர் சண்முகவடிவேல், அரங்க இராமலிங்கம், கவிநாயகர் வி.கந்தவனம், கவிஞர் கந்தையா இராஜமனோகரன், கஸ்துரிபா காந்தி கண்ணியாகுருகுலம் தாயுமான சுவாமிகள் பரம்பரை திரு.அ.வேதரத்தினம், ரமணி குருஜி, யோகி யோகானந்த, சன்யோகி உமாசங்கர், திருப்பெருந்தாள் மடாதிபதி காசிவாசி முத்துக்குமாரசுவாமி  தம்பிரான் சுவாமிகள்,, உலக சமாதான ஆலயம் ஜெகத்குரு மஹாரிசி பரஞ்சோதி மகான், மலேசியா பத்துமலை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய டத்தோ  டன்ஸ்ரீ நடராஜன், டான்ஸ்ரீ டத்தோ குமரன்,மறவன்புலவு சச்சிதானந்தன், மலேசியா தமிழ்த்துறை முனைவர்  சபாபதி, புதுவை வை.நாராயணசுவாமி இந்து கலாச்சார அலுவலக் பணிப்பாளர் ,திருமதி சாந்தி நாவுக்கரசன், பேராசிரியர் வேதநாதன்,பேராசிரியர் சிவலிங்கராஜா,முனைவர் சீர்காழி ராமதாஸ்,சுவாமி ரமண சிவரூபானந்தா, தென்னாபிரிக்கா சரஸ்வதி படையாச்சி, சுகி சிவம்,வானொலி ,தொலைக்காட்சி முன்னணி அறிவிப்பாளர்கள் விமல் சொக்கநாதன் ,ஜெகன் போன்றவர்களுடன் ஏராளமான  புத்திஜீவிகள் ,பேராசிரியர்கள் அறிஞர்கள் பலர் வருகை தந்து செவிக்கினிய சொற்பொழிவுகளை வழங்கிச் சென்றுள்ளனர். இவர்களது வருகையானது இப்பிரதேச இந்து மக்களுக்கு ஒரு பெரும் பேறாக அமைந்துள்ளது என்பது அடியார்கள் கருத்தாகும்.
இளம் தலைமுறையினருக்கு சமய அறிவு ஊட்டல்
ஆலய பணியுடன் ஆலய நிர்வாகம் புலம் பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையினருக்கு சைவப் பண்பாடுகளை ஊட்டி வளர்ப்பதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. இளம் சிறார்களுக்கென தேவாரம், பண்ணிசை, சமயவழிபாடு தொடர்பாக விசேட வகுப்புக்களையும் ஆலயத்தில் நடத்தி வருவது முக்கிய விடயமாகும். இளம் தலைமுறையினர்        தவறான பாதையில் செல்வதைத் தடுப்பதற்காக சமயநெறிபால் அவர்களை இழுக்க இந்தச் செயற்பாடு உதவியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இன்னல்படுவோருக்கு உதவும் திட்டம்
இவற்றுக்கெல்லாம் மேலாக ஆலயத்தில் கிடைக்கும் வருமானத்தை தாயகத்தில் இன்னல்படும் எமது உறவுகளுக்கு உதவ நலத்திட்டங்கள் கூட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. வாழ்வாதாரத்துக்கும் கல்வி வளர்ச்சிக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன.
பெண்களைத் தலைமையாகக்கொண்ட குடும்பங்கள், விதவைகள், அவயவங்கள் இழந்தவர்கள், சிறுவர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை ஆலய நிர்  வாகம் செய்துவருகின்றது.
பல்வேறு      பரிமாணங்களில்     ஆலயம்    ஆற்றும் பணிகளை நோக்கும் போது, இன்றுள்ள காலகட்டத்தில் சமயப்புரட்சி ஒன்றை ஆலயம் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.