சைவசமயம்

Shiva-saiva-siddhanta
சைவசமயம் என்பது வரலாற்றிற்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சமயமாக உலகத்தோரால் கூறப்பட்டு வந்தாலும் கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சிந்துவெளி நாகரிக காலத்தில் அவை வளர்ச்சி அடைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில் சிவ வழிபாடு, சக்தி வழிபாடு என்பன அக்காலத்தில் முக்கியப் படுத்தப்பட்டிருந்ததை அறிந்தோர் அறிவர். ஆரியர் வருகையுடன் வீழ்ச்சியடைந்த சிந்துவெளி நாகரிக நடைமுறைகள் மீண்டும் வரலாற்று ஆசிரியர்கள் கூறும் சங்ககாலப் பகுதியில் மக்கள் வாழ்வியலோடு சைவசமயம் வளரத் தொடங்கியது.
முதற்சங்கம் முதல் கடைச்சங்ககாலம் என்று வரலாற்றாளர்களால் கூறப்பட்டுள்ள கி.மு 300 தொடக்கம் கி.பி 250 வரையான காலப் பகுதிகளையே சங்ககாலம் எனக் கூறுதல் பொருத்தமுடையதாக இருக்கும். முதற்சங்கம் முதல் கடைச்சங்ககாலம் என்று வரலாற்றாளர்களால் கூறப்பட்டுள்ள கி.மு 300 தொடக்கம் கி.பி 250 வரையான காலப் பகுதிகளையே சங்ககாலம் எனக் கூறுதல் பொருத்தமுடையதாக இருக்கும். அக்காலத்தில் எழுந்த சங்க நூல்களில் இருந்து சைவசமயம் எந்தளவுக்கு மக்கள் வாழ்க்கையோடு கலங்திருந்தது என்பது புலனாகும். வடநாட்டிலே வேதகாலத்திற்குப் பின் புராணங்களும் இதிகாசங்களும் தோற்றம் பெற்றதோடு சைவம், வைணவம் ஆகிய இருபெரும் சமயங்கள் அக்கால மக்களிடையே மதிப்புப் பெற்று விளங்கின. சமயத் தத்துவங்களை பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தும் நோக்குடன் புராணக்கதைகள் அக்காலத்தில் பல்கிப் பெருகியது. தமிழ் நாட்டிலும் இத்தாக்கங்கள் பரவி நிலைகொண் டிருத்தது என்பதை சங்க முதல் நூலான தொல்காப்பியத்திலிருந்தே அறியக் கூடியதாக இருக்கின்றது.
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்ற தொல்காப்பியர்
கூற்று ஆன்மீகத் துறைசார் அறிஞர்களே உலகத்தை ஆழக்கூடியவர்கள் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது. இதைக் கடவுள்சார் வாதமாகவே உலகோர் கருதுகின்றனர். கடவுள் வழிபாடு என்பது நம்பிக்கைக்கு உரிய பொருளாக அக்கால வழக்கத்தில் இருந்தது என்பதற்கு தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றில் காணப்படும் கடவுள் வாழ்த்தே உதாரணமாகும்.
“கோடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.”

இருந்தும், கடவுள் என்று கூறப்படும் பொருளுக்குச் சிவன் என்ற பெயர் வழங்கியதற்குத் தொல்காப்பியத்தில் சான்றுகள் ஒன்றும் இல்லை. இதற்கும் மேலாக சங்க இலக்கியத்தில் காணப்படும் ஐவகை நிலப் பிரிவுகளுக்கும் தனித்தனித் தெய்வங்கள் இருந்ததற்கான ஆதாரம் தொல்காப்பியத்தில் காணக்கூடியதாக உள்ளது. குறிஞ்சி நிலத்தில் முருக வழிபாடும், முல்லை நிலத்தில் மாயோனும், பாலை நிலத்தில் கொற்றவைத் தெய்வமும், மருத நிலத்தில் இந்திரனும், நெய்தல் நிலத்தில் வருணனும் வழிபடப்பட்டார்கள். இவை தற்காலத்திலும் சைவசமயக் கடவுள்களாகத் தற்காலத்திலும் இருப்பதைக்கண்டுகொள்ளலாம்.
அக்காலத்தில் கடவுளைக் கந்து என்றும், கந்தம் என்றும் அழைக்கப்பட்டமைக்கு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் தொகை நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன.
“கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்கமேறி பலர் தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்” (பட்டினப்பாலை)
“கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பல்கண் மாறிப் பாழ்படு பொதியில்” (புறநானூறு)
“மரஞ்சேர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றினை” (அகநாநூறு)

மரத்தால் கட்டப்பட்ட கோவில் போன்ற அமைப்பையே மரஞ்சேர் மாடம் என்றும் அங்கே யாழும், முழவும் இசைத்து மக்கள் வழிபட்டனர் என்பதும் பொருளாகின்றது. நச்சினாற்கினியரும், மறைமலை அடிகளும் கந்து என்பதற்குப் பொருள் சிவலிங்கமே என்று கூறுகின்றார்கள். லிங்கம் என்ற சொல் சங்ககாலத்தில் காணப்பட வில்லையாயினும் கி.மு 2 ஆம் நூற்றாண்டுச் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்ட மையால் லிங்கவழிபாடு அக்காலத்திலும் மக்களால் வழிபடப்பட்டதென்று கொள்ள முடிகின்றது. சிவனைக் குறிப்பிடக்கூடிய பல பெயர்கள் சங்ககாலச் செய்யுட்களில் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறைமிடற்று அண்ணல், மழை தலை வைத்தவன் போன்றவற்றைக் காணலாம்.
சங்ககாலத்தில் சைவவமய வழிபாடுகள் மட்டுமன்றி முருகன், திருமால் போன்ற தெய்வங்களுக்குக் கோவில்களும் இருந்ததாக அறியப்படு கின்றது. சங்ககாலத்தில் எழுந்த சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வற்கு ஆய்வேள் அளித்தனன் என்று கூறப்பட்டுள்ளமை கோவில் இருந்தமைக்குச் சான்றாக அமைகின்றது. சங்ககால மக்களின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிலப்பதிகாரத்திலும்
பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோவிலும் என்று கூறப்படுகின்றது. மணிமேகலையில் சிவனை பிறவா யாக்கைப் பெரியோன் என்றும்இ நுதல்விழி நாட்டத்து இறைவன் என்றும் அடைமொழிகளாற் குறிப்பி டப்பட்டுள்ளார். ஆயினும் சைவவாதி என்றும் சிவனுக்கு பெயர் கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கப் பதமீறாக” (மணிமேகலை)

சங்ககாலத்தில் வாழ்ந்த தலைசிறந்த புலவர்களுள் ஒருவரான ஓளவையாரும் முருகனைப் பற்றியும், விநாயகரைப் பற்றியும் பண்கனிந்த பல பாடல்கள் மூலம் அக்கால இறைவழிபாட்டின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்தோதியுள்ளார். சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிவநெறிச் சைவவழிபாடே பிற்காலத்தில் வந்த சங்கம் மருவியகாலத்து அற, ஆசாரக் கருத்துகளுக்கு ஆணிவேராக அமைந்தது என லாம். சங்ககாலத்துத் தமிழர்கள் சங்கம் அமைத்துத் தமிழுடன் சைவசமயத்தையும் அறநெறி தவறாது பேணிப் பாதுகாத்தனர் என்பது வெள்ளிடைமலை.
நான்மறையை பொதுநூலாகவும் சிவாகமங்களை சிறப்புநூல்களாகவும் கொண்ட திருநெறி சைவசமயமாகும்.சைவசமயத்தின் சைவசித்தாந்தம் இவ்விருநூல்களுடன் தோத்திரநூல்களாக திருமுறைகளையும் சாத்திரநூல்களாக பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களையும் கொண்டு பாருக்கு ஒளியூட்டும் திருநெறியாகும். முழுமுதற்கடவுளும் தனக்குவமை இல்லாதவரும் பிறப்பிலி இறப்பிலியாக விளங்குபவருமாகிய சிவகாமியம்மை உடனாய சிவபெருமானை வழிபடுபவர் சைவராவர். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

சைவ சமய மேசமயஞ் சமயா
தீதப் பழம்பொருளைக்
கைவந் திடவே மன்றுள்
வெளிக் காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமய
நெறி புகுத வேண்டா முத்தி தருந்
தெய்வ சபையைக்காண்பதற்
குச் சேரவாருஞ் சகத்தீரே

சிவசம்பந்த முடையது சைவம் எனப்படும். “தெய்வஞ்சிவமே சிவனருள் சமயஞ்-சைவஞ் சிவத்துடன் சம்பந்தமென்றான்” (திருச்செந்தூரகவல்) அந்தச் சிவபரம்பொருளால் உயிர்கள் உய்தி பெறும் பொருட்டு அவை தாம் கடைப்பிடித்துஒழுக வேண்டிய உண்மை நெறிகளை யெல்லாம் அவை கண்மாட்டுவைத்த பெருங் கருணையினாலே வேத சிவாகமங்களிலே வகுத்து வைக்கப்பட்டன வற்றைத் தன்னகத்தமைத்துக் கொண்டு ஒப்புயர்வற்றதனிப்பெருஞ் சிறப்புடன் திகல்வது சைவ சமயமாகும். சைவ சமயத்தின் ஒப்புயர்வற்ற ஒரு தனிப் பெருந் தலைவரும் அச்சிவபரம் பொருளேயாவர்.

திருமந்திரம்

சைவஞ் சிவனுடன் சம்பந்தமாவது
சைவந் தனையறிந்தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீவுதற்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.
சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்து ளார்க்கு வகுத்துவைத் தானே.

சிவமாவது எங்கும் நிறைந்ததாய், என்றும் உள்ளதாய் எல்லாம் அறிவதாய், எல்லாம் வல்லதாய், அகண்டமாய், அருள் வெளியாய், ஆதியந்தமற்றதாய், ஆனந்தமயமாய், உயர் வொப்பில்லாததாய். உரையுணர் விறந்ததாய், மலரகிதமாய், கற்பனை கடந்ததாய், குணங்குறியற்றதாய், நாமரூபமில்லாததாய், பேரொளியாய், போக்குவரவு சமீபம்தூரம், சுகம்துக்கம், தூலம் சூக்குமம், சுத்தம் அசுத்தம், குணம் குற்றம், பேதம் அபேதம், குறைவு, நிறைவு, உயர்வு தாழ்வு, முதலிய விகற்பங்களற்றதாய், எவ்வகைச் சமயத்தினர்க்கும் அவ்வவர் பொருளாய், தன்னை மெய்யன்போடு வழிபடும் அன்பர்களது பேரன்பே தனக்குரிய வடிவமாகக் கொண்டு விளங்கும் ஒப்பற்ற ஒரு தனிப்பரம் பொருளாகும். சிவம் என்னுஞ் சொல்லுக்கு மங்கலம் என்பது பொருளாகும். மேலே கூறப்பட்ட மங்கல குணங்கள் யாவும் கடவுளிடத்தில் பொருந்தியிருப்பதினால் அக்கடவுள் சிவனெனும் நாமந் தனக்கேயுரிய செம்மேனி எம்மானாக விளங்கி நிற்கின்றார்.