சுவிஸ் நாட்டில் சுப்பிரமணியர்

முன்னுரை

தெய்வத்‌ தமிழ்நாட்டில்‌ ஆறுபடை வீடுகள்‌

அமைந்துள்ளதைப்‌ போல, சுவர்ண பூமியான சுவிற்சர்லாந்தில்‌ உயர்ந்த ஆல்ப்ஸ்‌ மலைத்தொடரில்‌, ரைன்‌ நதியின்‌ எழிலான ஓட்டம்‌, பச்சைப்‌ பசேலென புல்வெளிகளின்‌ காட்சிகள்‌ இவை அனைத்தும்‌ ஒருங்கே அமைந்த குறிஞ்சி நிலப்பரப்பில்‌, முருகனுக்கு ஆறுபடைவீடுகள்‌ எனும்‌ ஆறு முருகன்‌ ஆலயங்கள்‌, சுவிற்சர்லாந்து நாட்டில்‌, சமச்சீரான இடைவெளியில்‌ அமைந்து அலங்கரிக்கின்றன.

தமிழகமும்‌, சுவிற்சர்லாந்தும்‌

தமிழகத்தில்‌ ஆறுபடை வீடுகள்‌ என அழைக்கப்படும்‌ பழனியில்‌ தண்டாயுதபாணியாகவும்‌, திருப்பரங்குன்றத்தில்‌ சுப்பிரமணியராகவும்‌, திருச்செந்தூரில்‌ செந்தில்‌ ஆண்டவராகவும்‌, சுவாமிமலையில்‌ சுவாமிநாதராகவும்‌, பழமுதிர்சோலையில்‌ வெற்றி வேலனாகவும்‌, திருத்தணியில்‌ பாலசுப்பிரமணியராகவும்‌, பல்வேறு வடிவங்களில்‌ வீற்றிருந்து அருள்பாலித்துக்‌ கொண்டிருக்கிறார்‌, தமிழ்க்கடவுளான முருகன்‌. அதேபோன்று, சுவிற்சர்லாந்து நாட்டிலும்‌, ஆறுபடை
வீடுகள்‌ என வழங்கப்படும்‌ செங்காலன்‌ சென்மார்க்கிறெத்தனில்‌ கதிர்வேலாயுதராகவும்‌, பேர்னில்‌ கல்யாண சுப்பிரமணியராகவும்‌, சூரிச்சில்‌ ஸ்ரீ சிவசுப்பிரமணியராகவும்‌, சவ்கெளசனில்‌ ஸ்ரீ முருகனாகவும்‌, அறோவில்‌ முருகனாகவும்‌, லுகானோவில்‌ ஸ்ரீ சுப்பிரமணியராகவும்‌ வீற்றிருந்து, அருள்பாலித்துக்‌
கொண்டிருக்கிறார்‌, முருகப்பெருமான்‌. தமிழகத்தின்‌ ஆறுபடை வீடுகள்‌ போன்று சுவிற்சர்லாந்திலும்‌ (ஆறுபடை வீடுகள்‌ அமைந்துள்ள) ஆறுமுருகன்‌ ஆலயங்களிலும்‌ வேதாகம முறைப்படி பூசை வழிபாடுகள்‌ நடைபெற்று வருகின்றன. பெரும்‌ எண்ணிக்கையான மக்கள்‌ புலம்‌ பெயந்து வாழ்ந்தாலும்‌, தமக்கு ஏற்படும்‌ இன்னல்களுக்குத்‌ தீர்வு வேண்டி, இந்த ஆலயங்களில்‌ பூசை, வழிபாடுகள்‌ செய்து வணங்குகின்றார்கள்‌.

விழாக்கள்‌

இந்த ஆலயங்களில்‌ முருகனின்‌ முக்கியமான விழாக்கள்‌ அனைத்தும்‌ சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாதந்தோறும்‌ கார்த்திகை நட்சத்திரத்தில்‌ சிறப்பு பூசைகள்‌, தைப்பூசம்‌, கந்தஷஷ்டி குமாராலயதீபம்‌ போன்ற விழாக்கள்‌, வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தைப்பூசத்‌ திருவிழாவும்‌ கந்தஷஷ்டித்‌ திருவிழாவும்‌, இந்த ஆலயங்களில்‌ வெகு விமரிசையாகக்‌ கொண்டாடப்‌ படுகின்றன. இதில்‌ பெரும்‌ எண்ணிக்கையான முருக பத்தர்கள்‌ அந்தப்‌ பெருவிழாவில்‌ பங்கேற்று வழிபாட்டில்‌ ஈடுபடுகின்றனர்‌.

ஆலய வருடாந்த உற்சவங்களும்‌ வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. தேர்த்திருவிழா அன்று பெரும்‌ எண்ணிக்கையான பக்தர்கள்‌ காவடி எடுத்தும்‌ அங்கபிரதட்சணம்‌ செய்தும்‌ பெண்கள்‌ அடி அழித்தும்‌, கற்பூரச்‌ சட்டிகளை ஏந்தியும்‌ தமது நேர்த்திக்‌ கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்‌.

மக்கள்‌ சேவையில்‌

இந்த ஆலயங்களின்‌ நிர்வாகிகள்‌, இன்னல்படும்‌ மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும்‌ வழங்கி வருகின்றனர்‌. இதன்மூலம்‌ தமிழ்ச்‌ சமுதாயம்‌ பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றது.

தனிச்சிறப்பு கொண்ட கதிர்வேலாயுதசுவாமி

இந்த ஆறு முருகன்‌ ஆலயங்களில்‌ செங்காலன்‌ மாநிலத்தில்‌, சென்மார்க்கிறெத்தனில்‌ அமைந்துள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்‌ சிறப்பு தனித்துவமானது. அந்த ஆலயம்‌ வெள்ளை மயிலை தன்னகத்தே கொண்டிருப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆலயத்தில்‌ இடம்பெற்ற கந்தஷஷ்டி உற்சவத்தின்‌ போது வெள்ளைமயில்‌ ஒன்று, ஆலய வளாகத்திற்குள்‌ தானாக வந்தது. அந்த வெள்ளை மயில்‌ இன்றும்‌ முறையாகப்‌
பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆலயத்திற்கு வருபவர்கள்‌ அந்த மயிலைப்‌ பார்த்துப்‌ பெருமகிழ்ச்சி அடைகின்றனர்‌.

இதற்கெல்லாம்‌ சிகரம்‌ வைத்தாற்போன்று, சுவிஸில்‌ வாழும்‌ முருகபக்தர்களுக்கு உத்வேம்‌ அளிக்கும்‌ வகையில்‌ இந்த ஆலய நிர்வாகிகள்‌, இரண்டாவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டை இந்த ஆலயத்தில்‌ நடத்தி முடித்துள்ளனர்‌.

மலேசியா திருவாக்கு திருபீடத்தின்‌ தவத்திரு பாலயோகி சுவாமிகள்‌ தலைமையில்‌ , இரு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தும்‌ அனைத்துலக முருகபக்தி மாநாட்டுத்‌ தொடரின்‌ முதலாவது மாநாடூ 2012 ஆம்‌ ஆண்டு மலேசியாவிலும்‌ இரண்டாவது மாநாடு, கடந்த 2014 ஆம்‌ ஆண்டு ஆலயம்‌ ஏற்பாடூ செய்து ஆலய சூழலில்‌ சிறப்புற மூன்று தினங்கள்‌ இடம்‌ பெற்று முடிந்துள்ளது. இதில்‌ எழுபத்தைந்துக்கும்‌ மேற்பட்ட ஆய்வாளர்கள்‌ முருகனின்‌ பெருமையை எடுத்து விளக்கும்‌
ஆய்வுக்‌ கட்டுரைகளை சமர்ப்பித்தனர்‌.

இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, மொரீசியஸ்‌, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பியா, நாடுகள்‌ என பல்வேறு நாடுகளிலிருந்து 200க்கும்‌ மேற்பட்ட கல்வியளர்கள்‌, ஆதீனங்கள்‌, அறிஞர்‌ பெருமக்கள்‌ ஒன்று கூடி முருகனின்‌ பெருமைகள்‌, அற்புதங்கள்‌ குறித்து ஆராய்ந்து, முருகனின்‌ வரலாற்றை மீள ஆராய, களம்‌ அமைத்துக்‌ கொடுத்தது இந்த மாநாடு.

மேலும்‌, இலங்கை, இந்தியாவிலிருந்து சமயப்‌ பெரியார்கள்‌, ஆன்மீகத்‌ துறவிகள்‌, கல்வியாளர்கள்‌, இசைக்கலைஞர்கள்‌ என அனைவரையும்‌ இவ்‌ ஆலயத்திற்கு வரவழைத்து அரிய கருத்துக்களையெல்லாம்‌ முருகபக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்‌.

நிறைவுரை

சுவிஸ்ஸிலுள்ள ஆறு முருகன்‌ ஆலயங்களிலும்‌ முருக வழிபாடு சிறப்பாக அமைந்துள்ளது. அறுபடை வீடுகளாக அமைந்த இந்த ஆலயங்களில்‌ முருகன்‌ புகழைப்‌ பரப்பி, தொடர்ந்து பணியாற்ற, எல்லாம்‌ வல்ல அந்த கதிர்வேலனின்‌ தாள்‌ பணிந்து வேண்டுகிறோம்‌…

“வேலுண்டு வினையில்லை மயிலுண்டூ பயமில்லை
வே. கணேசகுமார்‌

தலைவர்‌,
அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயம்‌